நாட்டை பிளவுபடுத்தவோ, அதிகாரங்களை பகிரும்படியோ தமிழர்கள் தற்போது கேட்கவில்லை. அதை கேட்பதற்கு பிரபாகரன் மீண்டும் வரப்போவதில்லை. தற்போது சுமந்திரன் போன்றவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். யாரும் நாட்டை பிரிக்க முயன்றால், பிரபாகரனையே அழித்த எமக்கு, பிரபாகரனின் பின்னால் வரும் யாரையும் எம்மால் அழிக்க முடியும் என தெரிவித்துள்ளார் களனி பல்கலைகழக மருத்துவபீட பீடாதிபதி நளின் டி சில்வா.
நந்திக்கடலில் பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டபோது, தமிழ் இனவாதமும் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆகவே இனி நாட்டில் தமிழ் இனவாதம் தோன்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (24) தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனை தெரிவித்தார்.
“தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தியே தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவே இந்த அரசியலமைப்பை உருவாக்குவதாகவும் கூறுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களிற்கு, தமிழ் தலைமைகளினாலேயே அதிக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் சிங்களவர்களிற்கு புரியவில்லையென்கிறார்கள். அவ்வாறு தெரிந்துகொள்வதென்றால், தமிழர்களாக இருக்க வேண்டுமென்கிறார்கள். தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இலகுவாக சொல்லிவிட முடியாதென்கிறார்கள்.
தமிழர்களின் பிரச்சனை எமக்கு தெரியாது, அழைக்கப்பட்ட அநீதியை இலகுவில் எமக்கு சொல்ல முடியாதென்றால், எப்படி தீர்வை வழங்குவது? எமக்கு புரியும்போது தீர்வை பெற்றுத் தருகிறோமென்றாலும் விடுவதில்லை. காரணம், அப்படியொரு பிரச்சனையும் கிடையாது. இல்லாத ஒன்றை கூறிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதிருப்பது வேறு பிரச்சனை.
சிங்கள மக்களின் வரலாறு 2,500 வருடங்கள். தமிழர்களின் வரலாறு வெறும் 350 வருடங்களே. இது இல்லையென்றால், அதனை யாரேனும் நிரூபித்து காட்டுங்கள் என பகிரங்க சவால் விடுக்கிறேன். சிங்கள மக்களின் வரலாற்றை இல்லாமல் செய்வதே வரலாறாக இருக்கிறது. அனைவரும் சமம் என கூற முடியும். ஆனால் கலாசாரம் ஒருபோதும் சமனாகாது. இந்த நாட்டில் சிங்கள கலாசாரமே முதன்மையானது.
அதை அழிப்பதற்கே சுமந்திரன் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் சுமந்திரன், ஆட்சி முறையில் மாற்றம் வேண்டுமென கூறுகிறார். ஆனால், ஆட்சி முறையிலேயே அனைத்தும் முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது முன்னெடுக்கப்படுபவை அதிகார பரவலாக்கல் கிடையாது. தமிழ் இனவாத பிரச்சனை கிடையாது. நந்திக்கடலில் பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டபோது, தமிழ் இனவாதம் சேர்த்து தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் தமிழ் இனவாதத்தை பற்றி பேச வேண்டிய தேவை யாருக்குமில்லை. எமது நாட்டின் சிங்கள தலைவர்களின் தவறு காரணமாகவே, தற்போது நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ளது.
பிரிவினையிலிருந்து நாங்கள் விலகி வந்திருக்கிறோம், ஆகவே எமக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்கிறார்கள். அதை நிறைவேற்றவே முயற்சிக்கிறார்கள். அது சுமந்திரனுக்கு முடியுமாக இருக்கும். ஆனால், நாம் அதை அனுமதிக்கமாட்டோம்.
சுமந்திரன் போன்றவர்கள் கூறுவதை யாரும் ஏற்கப் போவதில்லை. தமிழர்களிற்கு நாட்டை பிரிக்கவோ, அதிகாரத்தை பிரிக்கவோ அவசியமில்லை. சுமந்திரன் போன்றவர்களிற்கு அந்த தேவையுள்ளது. வடக்கில் விக்னேஸ்வரன், சுமந்திரனை விட இனவாதி. அவரால் தமிழ் மக்களை தூண்டிவிட முடியாதுள்ளது. தமிழர்கள் தலைதூக்க முடியாது. அந்தக்காலம் முடிந்து விட்டது. அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்களிற்கு நாட்டை பிரிக்கவோ, அதிகாரத்தை பிரிக்கவோ தேவையில்லை. அதற்கு மக்களும் வரப்போவதில்லை. அதை பெற்றுக்கொள்ள பிரபாகரன் மீண்டும் வரப்போவதில்லை. அதை பெற்றுக்கொள்ள சுமந்திரன் போன்றவர்களே முயற்சிக்கிறார்கள். பிரபாகரனையே அழித்த எமக்கு, பிரபாகரனின் பின்னால் வரும் யாரையும் அழிக்க முடியும்.
எந்த வழியிலாவது இந்த அரசியலமைப்பை தோல்வியடைய செய்ய வேண்டும். அதற்கு மைத்திரி- மஹிந்த எந்த வழியிலாவது ஒன்றிணைய வேண்டும். ஒக்ரோபர் 26ம் திகதி ஒன்று சேர்ந்தமையாலேயே புதிய அரசியலமைப்பு தடுக்கப்பட்டது“ என்றார்.