வாலிப வயது என்றால், அதற்கான சில சமாச்சாரங்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு “கெத்து” என்பார்களே அது. பொதுவாகவே வாலிப வயது என்றால் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். என்றாலும், வடக்கு, கிழக்கிலுள்ள பெரிய நகரங்களில் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை முறை சற்று வேறுபட்டது.
கைநிறைய பணம் அவர்களிடம் இல்லாவிட்டாலும் வீட்டில் பணிந்தோ, வெருட்டியோ வாங்க முடியும். வெளிநாட்டில் இருக்கும் அண்ணாவோ அண்ணியோ எடுத்துக் கொடுத்த பல்சரோ, ஹரிஸ்மாவோ மோட்டார் சைக்கிள்… சித்தப்பா வெளிநாட்டிலிருந்து வரும் போது கொடுத்த ஐ அல்லது சம்சுங் போன்ற ஒரு ஸ்மார்ட் போன்… பிறகென்ன, வாழ்க்கை வாழ்வதற்கே என தத்துவம் பேசிக்கொண்டு புறப்படுவார்கள்.
“நானும் அவர்களும் ஒன்றாகப் படித்தோம். ஒன்றாகவே குடிக்கின்றோம்“ என சொல்லிக்கொள்ள நான்கைந்து சினேகிதர்கள்.
காலையில் அரக்கப்பரக்க எழுந்து பல்லும் தேய்க்காமல் முகத்தை மட்டும் கழுவி, இருப்பதில் நல்லதான ஒரு ஜீன்ஸ், சேட் போட்டுக் கொண்டு பறப்பார்கள். பாடசாலைக்கு, ரியூசனுக்குதான் போவார்கள். படிக்க அல்ல, அங்குவரும் பிள்ளைகளிற்காக. அல்லது உயர்கல்வி நிலையங்கள், பேரூந்து தரிப்பிடம்.
யாரோ ஒருவன் காதலிக்கிறானாம். அவனிற்கு மற்றவர்கள் சப்போட்டாம். காதலிப்பவன் முகத்திற்கு ரொமான்சே வராது. மற்றவர்கள் தான் லுக்கு விடுவது எப்படியென்பதை சொல்லிக் கொடுப்பார்கள். ‘மச்சான்… அவள் வரேக்க ஒரு லுக்கு விடு. ஒரு ஹாய் சொல்லு.“ சந்தானத்திடம் ரொமான்ஸ் பழகிக் கொண்டு சென்ற ஆர்யாவைப் போல நம்மாள் வீதியோரம் நின்று ரொமான்ஸ் விட, அவளுக்கு காதல் வராது. செருப்பை கழற்றத்தான் வரும்.
இந்த இளைஞர்களின் முக்கிய இலக்கே ஒரு காதலி. ஸ்மார்ட் போன், மோட்டார் சைக்கிள் இல்லாமல் இருப்பது எப்படி கௌரவக் குறைச்சல் என்று கருதுகிறார்களோ அவ்வாறே காதலி இல்லாமலிருப்பது பெரிய அவமானமெனக் கருதும் இளைஞர்கள்தான் நகரங்களில் அதிகம். யாரோ ஒருத்தியுடன் நான்கு பேர் பார்க்கக் கடலை போட வேண்டும். காசு வேண்டுமென்றால் வீட்டில் வெருட்டி வாங்கலாம். காதலை வெருட்டி வாங்கலாமா?
போய்ஸ்… இதைக் கவனியுங்கள். 200 சிசி பைக்கில், நான்கு நாள் தோய்க்காத உடுப்புடன் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அக்சிலேற்றரை முறுக்கினால் பெண்களிற்கு உங்களில் காதல் வராது. நாதாரியென்ற பெயர் தான் வரும்.
பாஸ்… அதெல்லாம் ஒரு கவிதை. காதல் இலேசாகப் பூக்கும் உணர்வு. அதை தூண்ட சிலபல வெளிக்காரணிகளும் உள்ளன. இதையெல்லாம் புரிந்து கொண்டால்தான் காதலிக்கலாம்.
கீழே சொல்லியுள்ளது காதலின் பாலபாடம். பொதுவாக நமது தமிழ்ப் பெண்களின் எதிர்பார்ப்புக்கள், மனநிலையைக் கொண்டு தயாரித்து இதைக் கடைப்பிடியுங்கள். வாழ்வைக் கொண்டாடுங்கள்.
1. காதலின் அடிப்படையே காசுதான். யாராவது ஒரு பெண்ணிற்குப் பின்னால் “லோலோ” என்று திரிகின்றீர்களா? பாஸ், பாரதிராஜா படத்திற்குப் பிறகு அந்த உத்தியை நீங்கள்தான் கடைப்பிடிக்கின்றீர்கள். ஆனால் உலகம் நன்றாக மாறி விட்டது. உங்கள் உளுத்துப் போன உத்தியை விட்டுவிட்டு நீங்கள் விரும்பும் பெண் மாதம் எவ்வளவு செலவு செய்கின்றாள் என்பதைக் கவனியுங்கள். சொந்தக்காசு, அப்பன் காசு என்றால் நமது பெண்கள் ஒரு சதத்திற்கும் கணக்குப் பார்ப்பார்கள். உங்களை மாதிரி யாராவது நல்லவர்கள் மாட்டினால்தான் அவர்களிற்கு எல்லாமே. ஆகவே அவர் செலவு செய்வதில் 10 மடங்கையாவது மாதம் சம்பாதிக்க முயலுங்கள்.
2. காதலிக்கும் பெண்கள் செய்யும் அலப்பறை இருக்கின்றதே, அதைத் தாங்க இந்த ஜென்மம் போதாது. பக்கத்தில் உட்கார்ந்தால் இரண்டு காதாலும் இரத்தம் வடியும். நிலவைப்பார்த்தால் அதே போலென்று கார்கில்ஸில் வாங்கித்தா என்று அநியாயத்திற்கு அடம்பிடிப்பார்கள். (அவர்கள் குழந்தைகள் என நீங்கள் நம்பவேண்டுமாம்.) இதையெல்லாம் கேட்டு “உனக்கென்ன லூசா” என்று கேட்டீர்களோ, நீங்கள் ஆயுளுக்கும் சிங்கிள் தான். இதைத்தான் ஔவையார் சொல்லியிருக்கின்றார்- பொறுமை கடலிலும் பெரியது. (சொன்னது ஔவையாரா? அருணகிரிநாதரா?) அவர்களின் அலப்பறைகளைப் பார்த்துக் கோபப்படாமல், பாசமாக இருப்பதைப் போல நடியுங்கள்.
3. மிக முக்கியம். தொலைபேசி விடயத்தில் கவனமாக இருங்கள். பல ஜோடிகளைப் பிரித்தது இதுதான். உங்கள் ஆள் எப்போதெல்லாம் போன் செய்கின்றாளோ அதற்காக காத்திருந்தது மாதிரி உடனே பதிலளியுங்கள். ஏதாவது கோபமாகத் திட்டினாலும் மானே, தேனே போட்டு சமாளித்து விடுங்கள். சில பெண்களிற்கு தனது தோழிகளின் முன் காதலன் போன் பண்ண வேண்டுமென்ற ஆசையிருக்கும். சிலருக்கு தனிமையில்தான் பேசப்பிடிக்கும். உங்கள் ஆள் என்ன ரகம் என்பதை ஆரம்பத்திலேயே நாடி பிடித்துப் பார்த்து விடுங்கள். முக்கியமாக உங்கள் போனை நோண்டுவதிலேயே காதலி குறியாக இருப்பார். அலுவலகத்தில் பணிபுரிபவர் இலக்கம் என்றாலும் யாராவது பெண்கள் எனில் அக்கா, மிஸ் என சேர்த்து சேவ் செய்து வையுங்கள். தங்கச்சி கூடவே கூடாது.
4. எந்தவொரு பெண்ணுக்கும் தன்னுடைய பிறந்த தினம் என்றால் தன் காதலன்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீங்கள் போன் பண்ணி வாழ்த்துவீர்கள் என நம்பி நடுச்சாமம் வரை விட்டத்தைப் பார்த்துப் படுத்திருப்பார்கள். அதை மிஸ் பண்ணாதீங்க.
5. பரிசு என்பது ஆண்களை விட பெண்கள் அதிகமாகக் கொடுப்பார்கள். அதேபோல நீங்களும் எதையாவது பரிசளிப்பீர்கள் எனக் காத்திருப்பார்கள். உங்களிற்கு அவர் தரும் கிப்ற்- ஐ லவ் யூ சொல்லும் பொம்மை, இந்தியக் கிரிக்கட் அணி ரீசேட்டாகத் தான் இருக்கும். (அவைதானே மலிவானவை) ஆனால் நீங்கள் கொடுக்கும் போது தான் விஷப்பரீட்சை காத்திருக்கின்றது. பேச்சோடு பேச்சாக சூசகமாக தனக்கு தேவையானதை சொல்லியும் விடுவார்கள். அதை கவனித்து வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால்….. நீங்களே அனுபவித்துப் பாருங்கள்.
6. சில சமயங்களில் உங்கள் ஆள் அப்செற்றில் இருப்பார். பாட்டி திட்டினார். “பப்பி”க்கு (வீட்டுநாய்) காய்ச்சல் என. இதுதான் நீங்கள் ஸ்கோர் செய்ய சரியான வாய்ப்பு. நீங்கள் அவருடன் எப்படி நடந்து கொள்கிறீர்கள் எனப் பார்க்கவும் இப்படி நடிப்பார்களாம். நீங்கள் ஒரு பொறுப்பான, தந்தையைப் போல அரவணைக்கின்ற ஆள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் புரிய வைத்து விடுங்கள். நீங்கள் நன்றாக அன்பு செய்கின்றீர்கள் எனத் தெரிந்து கொண்டால் “என்னில் உங்களிற்கு அக்கறையே இல்லை” என வார்த்தைக்கு வார்த்தை சொல்வார்கள். அப்படிச் சொல்ல ஆரம்பித்து விட்டால்… நீங்கள் சிக்சர் அடித்துவிட்டீர்கள் என அர்த்தம்.
7. உங்கள் பைக்கிற்கும், குவைத் எண்ணை கிணறிற்கும் ஒரு கனெக்ஷன் வைத்திருக்க வேண்டும். கோட்டை பார்க்க வேண்டும், கொடிகாமம் பார்க்க வேண்டும் என திடீர் திடீரெனக் கூறுவார்கள். அவர்கள் மூட் மாறுவதற்குள் ஏற்றிக் கொண்டு பறந்து விட வேண்டும். பைக்கில் பெற்றோல் இல்லை, காசில்லை என பம்மிக் கொண்டு நின்றால்… காலம் நன்றாக கெட்டுப் போயுள்ளது, உங்கள் நண்பன் ஏற்றிக் கொண்டு போய்விடுவான் பாஸ்!
8. பொய் சொல்லக் கூடாது. பெண்களுக்கு பொய் சொல்வது பிடிக்காது. “அவர்கள் முழுக்கப் பொய்தானே சொல்கிறார்கள்…. நாங்கள் இரண்டு சொன்னால் குறைந்து விடுமா“ என நினைக்கின்ற ரகமா நீங்கள். உங்களிற்கு காதல் சரிவராது. உங்கள் காதலி பொய் சொல்கிறார் எனத் தெரிந்தால் அதை பெரிதாகக் குத்திக் காட்டாதீர்கள். அதை நாசூக்காகக் குறிப்பிடுங்கள். ஆனால் அந்த சலுகை உங்களிற்கு கிடையாது.
9. தப்பித்தவறிக் கூட உங்கள் காதலியின் நண்பியைப் பற்றி பேசிவிடாதீர்கள். நீங்கள் எதார்த்தமாகத்தான் பேசுவீர்கள், ஆனால் கடைசியில் பாதார்த்தமாகி விடும். எப்பவாவது ஒருமுறை அவரது நண்பியைப் பற்றி ஒரு வார்த்தை பேசியிருப்பீர்கள். ஆயுள் முழுக்க அதைப் பிடித்து வைத்திருப்பார்கள். உங்களுடன் இருக்கும் போது தன்னைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்துப் பெண்களுமே மோசமானவர்கள் என்பதைப் போல பேசுவார்கள். நீங்கள் ஆமா போட்டு விடுங்கள்.
10.கடைசி விடயம் இது. காதலிலும் இதுதான் கடைசி தியரி. திரிசா இல்லைன்னா திவ்யா. இப்படியொரு ஜென் நிலை உங்களிற்கு அவசியம். ஏனெனில் இந்தக்கால காதல்கள் எப்படியும் ஒன்றோ இரண்டோ மாதங்களில் ஊற்றிக்கொண்டு விடும். ஊற்றிக்கொண்ட காதலை நினைத்து நீங்கள் “ரெஸ்ரேரன்றில்” ஊற்றிக் கொள்ளக்கூடாது. உடம்பு பத்திரம். திரிசா இல்லைன்னா திவ்யா என்றபடி போய்க்கொண்டே இருக்க வேண்டும்.