இலங்கை அரசாங்கம் முக்கிய விடயம் ஒன்றில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பிரபல சமூக ஊடக தொலைதொடர்பு செயலிகளான WhatsApp மற்றும் Viber ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
WhatsApp மற்றும் Viber ஆகிய செயலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்க கூடிய கருவிகளை தருவிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், WhatsApp மற்றும் Viber ஆகியனவற்றின் ஊடான தொடர்பாடல்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கு ஜாமர்களை கொள்வனவு செய்யவும் சட்டம் ஒழுங்கு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த கருவிகள் கொள்வனவு செய்யப்படவிருந்தன. எனினும் அரசியல் குழப்ப நிலைமைகளின் பின்னர் மீளவும் இந்தக் கருவிகள் கொள்வனவு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கான வியூகம் வகுக்கப்பட்டது.
இருந்த போது முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் நல்லாட்சி ஆதரவ செயற்பாட்டாளர்கள் Viber தொழில்நுட்பத்தின் ஊடாகவே தொடர்பாடல் மேற்கொண்டிருந்தனர்.
இதனை தேர்தல் வெற்றியின் பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.