கொலை செய்யப்பட்ட பெண் உடலை வேறு ஒருவரது கட்டிலின் பெட்டியில் புதைத்துவிட்டு தலைமறைவானார் கணவன். பிணம் இருந்த பெட்டியின் மீது அந்த நபர் 5 நாட்கள் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் உள்ள குராகாவ் என்ற இடத்தில் நடந்தது. இது குறித்து பொலிஸார் கூறியதாவது, பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர் பபிதா(30). இவருக்கு திருமணமாகி ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ளனர். கணவரை விவாகரத்து செய்த அவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஹரியானா மாநிலம் குராகாவ் பகுதியில் வசித்த வந்தனர். தினேஷ் என்பவரிடம் ராஜேஸ் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில், தினேஷ் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, ஜனவரி 21- ம் தேதி வீட்டுக்கு திரும்பினார். தினேஷின் வீட்டுச் சாவி ஒன்று ராஜேஸிடமும் இருந்திருக்கிறது.
ராஜேஸிடம் தொலைபேசியில் பேசிய தினேஷ், தாம் வீட்டுக்கு வந்துவிட்டதாகவும், பணிக்கு எப்போது வருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ், அவசர பணி காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும், விரைவில் வருவதாகவும் தெரிவித்தார்.
3-வது தினத்திலிருந்து தன் வீட்டில் ஏதோ துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அதை தினேஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 5-வது நாள் துர்நாற்றம் அதிகமானது.
தான் படுத்திருக்கும் கட்டிலில் பெட்டி உள்ளது. அதனுள் இருந்துதான் துர்நாற்றம் வருவதை உணர்ந்து, திறந்து பார்த்தபோது, தினேஷ் மூர்ச்சையாகிப் போனார்.
உள்ளே அழுகிய நிலையில் ஓட்டுநர் ராஜேஸின் மனைவி பபிதாவின் உடல் இருந்தது. உடனே பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மனைவியை கொன்றுவிட்டு, தினேஷின் கட்டிலில் உள்ள பெட்டியில் பிணத்தை வைத்து விட்டு ராஜேஸ் தப்பி ஓடியது தெரியவந்தது.
தன் மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டே ராஜேஸ் கொலை செய்திருப்பதாக பபிதாவின் தந்தை கூறியிருக்கிறார்.
5 நாட்களாக பிணத்தின் மீது உறங்கிய தினேஷ், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்கிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.