மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக உடை மாற்றிய பெண்ணை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புனேவில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஸ்கேன் செய்யும் இடத்துக்கு சென்ற அப்பெண்ணிடம் மருத்துவமனையின் உதவியாளர் ஒருவர் ஆடைகளை தனியறையில் மாற்றிக்கொள்ள கூறியுள்ளார்.
அந்த அறைக்கு சென்று ஆடையை மாற்றிய அந்த பெண் அறையில் ஒரு கேமரா வசதி கொண்ட செல்போன் ஒன்று ஒளித்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார்.உடனடியாக தன்னுடைய கணவரிடம் அந்தப்பெண் கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். செல்போனை சோதனை செய்ததில் அதில் உடை மாற்றும் சில வீடியோக்கள் இருந்துள்ளன. இதனையடுத்து செல்போனை அங்கு வைத்த மருத்துவமனை ஊழியர் லாகுவை (25) சட்டவிதி 354ன் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.