கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இச்சாதனை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் (Consultant Orthopedic Surgeon) மருத்துவர் எஸ். சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்க மருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனைச் சரித்திரத்தினைப் புரிந்துள்ளனர்.
கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 லட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு பாரிய சத்திரசிகிச்சையாகும்.
எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.