தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஜனாதிபதியின் பணிக்கு அமைய தேசிய போதை பொருள் ஒழிப்ப வாரம் பாடசாலைகள் தோறும் கடந்த 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெற்று வந்தது.
இதன் போது பாடசாலைகள் இந்த ஐந்து நாட்களும் துறைசார்ந்தவர்களை அழைத்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்க வேண்டும்.
அதனடிப்படையில் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவர் பொலிஸாரிடம் தனது பிரதேசமான கோணாவில் கிழக்கு பிரதேசத்தில் கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது என்ற தகவலை வழங்கியிருந்தார்.
இந்த தகவல் கஞ்சா விற்பனை செய்கின்றவர்களின் காதுகளுக்கு சென்றடைய அவர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர். அத்தோடு மாணவனின் குடும்பமும் அவர்களின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இது தொடர்பான செய்திகள் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன.
இதனையடுத்து நேற்று மாலை எழு முப்பது மணியளவில் குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளிவிட்டு ‘ நீ. செத்தாயடா’ என்று கூறியவாறு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் காலில் பாதிக்கப்பட்ட மாணவன் அவசரநோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மாணவனுக்கு காலில் முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிசை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தமது மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பெற்றோர் பாடசாலைக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அத்தோடு மாணவனை பாடசாலையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் தீர்மானித்திருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1984 அழைப்பினை மேற்கொண்டு அறிவித்தும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் பெண்கள் சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்தும் மாவட்டத்தில் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கின்ற பல அமைப்புகள் இருந்தும் இச் சம்பவம் தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.