திருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) காலை பத்து முப்பது மணி அளவில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்களை கடற்படையினர் கைது செய்வதற்காக சென்றதையடுத்து அவர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும், இதனை அடுத்து கடற்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் பீதி அடைந்து, ஆற்றில் பாய்ந்த மூவரில் ஒருவர் தப்பியுள்ளதோடு, மற்றைய இருவரும் காணாமல் போன நிலையில் அவர்களை நேற்றுக் காலை முதல் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (29) இரவு 7.30 மணியளவில் குறித்த இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் முகம்மது பாரிஸ் (22) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, காணாமல் போன இரண்டாமவரை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்களும் கடற்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது.