திருகோணமலை – கிண்ணியா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் சிலர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (29) அங்கு சென்ற கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் அச்சமடைந்த மூவர் கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் கடலில் குதித்த போது ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
காணாமல் போன இருவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டதால் அதிலிருந்து கடற்படை நேற்றிரவு விலகிக் கொண்டது.
மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் அங்கிருந்து சென்றுள்ளதாக செய்திகள் எமக்குக் கிடைத்துள்ளன.
இந்நிலையில, தற்போது விசேட அதிரடிப்படையினர் அங்கு தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு தேடுதல் நடவடிக்கையில் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்களின் கல்வீச்சில் காயமடைந்த 12 கடற்படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.