சென்னை குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில், இறந்த பெண் கர்நாடகா அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி, சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2 கால்கள் மற்றும் வளையலுடன் ஒரு கை மட்டுமே கிடைத்தது.
தொடர்ந்து உடல் பாகங்களைக் கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள கோடம்பாக்கம், அசோக்நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் இருந்து குப்பைகள் கைப்பற்றப்பட்டதால், அப்பகுதியில் பெண்கள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா என பொலிசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கர்நாடகா அல்லது ஆந்திராவை சேர்ந்தவருடையதாக இருக்கலாம் என்று பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் வயது 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
இரு மாநிலங்களிலும் காணாமல் போன பெண்கள் பட்டியலை வைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.