நாக்பூரில் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவிகள் மீது காவலர் ஒருவர், பணத்தை வாரியிறைத்ததைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின்போது அங்கு வந்திருந்த காவலர் ஒருவர் மாணவிகளின் மீது பணத்தை வாரி இரைத்துள்ளார்.
காவலரின் இந்த செய்கை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பிவாப்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரமோத் வால்கே என்ற அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
மேலும் அவர் இந்த நிகழ்ச்சியின்போது குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேளிக்கை நடன பார்களில் நடனம் ஆடுபவர்களுக்கு பணம் தரலாம், ஆனால் பணத்தை வாரி இரைக்ககூடாது என்ற கட்டுபாட்டுடன், மும்பையில் உள்ள பார்களை திறப்பதற்கு அனுமதி அளித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இச்சம்பவம் அரங்கேறி இருப்பது சலசலப்பை உண்டாக்கி உள்ளது.