இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்ட பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை கடுனேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கொடுவ மாவதகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணின் கணவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் சிலர் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சந்தேகநபரான பெண் இளைஞர்களிடம் இருந்து 5,10,15 மற்றும் 17 இலட்சம் ரூபாய்களை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் சந்தேகநபரான பெண்ணுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது குறித்த பெண் பங்கதெனிய பிரதேசத்தின் விடுதியொன்றில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் , சுற்றிவளைப்பின் போது விடுதி ஊழியரொருவருடன் பெண் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் வௌிநாடு செல்ல தயாராவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் படி இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 8 பேர் மாரவில பொலிஸார் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
போலியான பெயரில் தன்னை அடையாளப்படுத்தியிருந்த குறித்த பெண் அந்த பெயரில் போலியான அடையாள அட்டை , பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை தயாரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் , இத்தாலி செல்வதற்காக போலியான விசாவையும் சந்தேகநபரான பெண் தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.