யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முதற்தடவையாக உயர்தரப் பண்புகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளன.
இதன்படி பேருந்து நிலையத்தில் அடுக்குமாடி வாகனத் தரிப்பிடம், வர்த்தகத் தொகுதி என்பன நவீனமயப்படுத்தப்படவுள்ளன.
மேலும் நகரின் போக்குவரத்து நெரிசலினைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் நவீன சந்தை ஆகியன பேருந்து நிலையத்துடன் மேம்பாலமூடாக இணைக்கப்படவுள்ளன.
இதற்காக பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன் எதிர்வரும் மார்ச்சு மாதம் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்லதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மக்கள் பாவனைக்கு வரவுள்ள இந்த நவீனமயப்பட்ட பேருந்து நிலையம், தற்போது அமைந்துள்ள காணியிலேயே அபிவிருந்தி செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின்படி யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையக் காணியில் அமைந்துள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை மத்திய பேருந்து நிலையத்தை மறுசீரமைக்கும் காலப் பகுதியில், யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு முன்பாகவுள்ள காணியிலேயே மத்திய பேருந்து நிலையம் தற்காலிகமாக இயங்கும் என்றும் மேயர் அறிவித்துள்ளார்.
அமையவுள்ள மத்திய பேருந்து நிலையத்தில் முக்கியமாக இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பார்த்தால், கீழ்த் தளத்தில் பேருந்து சேவைகள் நடைபெறும். அத்துடன் பயண நேரத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே பேருந்துகள் தரிப்பிடத் தளத்திற்கு வரும்.
வந்து நீண்ட நேரம் தாமதிக்காமல் சில நிமிடங்களில் புறப்படவேண்டிய இடத்திற்கான பயணத்தை ஆரம்பித்துவிடும். தற்போதுள்ளவாறாக அல்லாமல் பயண நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னதாக பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்லும்.
மேலும் கட்டடத்தின் முதலாவது தளத்தில் வர்த்தகத் தொகுதி அமையவுள்ளதுடன் இரண்டாவது தளத்தில் வாகனத் தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளது.
வாகனத் தரிப்பிடத்திலிருந்து நேரடியாக, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும், நவீன சந்தைக்கும் மேம்பாலம் கட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரை இதுவரை பேருந்து நிலையத்தில் எதிர் நோக்கும் சிரமங்களும் மற்றும் வைத்தியசாலை நவீன சந்தை போன்றவற்றில் எதிர் நோக்கிவரும் போக்குவரத்துச் சிரமங்களும் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்படத்தக்க வகையில் இதன்மூலம் நிவர்த்திசெய்யபடக்கூடிய நிலைமை காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.