அமெரிக்காவில் கொதிக்கும் தண்ணீர்கூட, நொடிப்பொழுதில் உறையும் அளவுக்கு வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் நிலவுகிறது.
அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.
மத்திய மேற்கு பகுதியில் உள்ள சிகாகோ உள்ளிட்ட சில நகரங்களில் மைனஸ் 29 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவிற்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளிவர இயலாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளில் பனிப்பொழிவு அதிகரித்ததால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில், ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் கொதிக்கும் நீருடன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வானத்தை நோக்கி ஊற்றுகிறார். ஆனால், அந்த கொதிநீர், வேகமாக வீசும் குளிர் காற்றினால், ஒரு நொடியில் வெண்பனித் துகள்களாக மாறி, காற்றுடன் கலந்துவிடுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.