திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்கள் மாயமான வழக்கில் சிசிடிவி காமிரா உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் உற்சவமூர்த்திக்கு பயன்படுத்தும் ஆயிரத்து 300 கிராம் எடை கொண்ட மூன்று தங்க கிரீடங்கள் மாயமாகின.
இதுதொடர்பான புகாரின் பேரில் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் உள்ளே உள்ள சிசிடிவி கேமராவினை போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு நபர் தனது பேண்ட் பாக்கெட்டில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்து எடுத்துக்கொண்டு ஓடுவது போல் ஒரு காட்சி வெளியாகி உள்ளது.
இதனை வைத்து அங்கு ஓடிய நபர் யார் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிரீடம் மாயமான வழக்கில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரி பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.