கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு படம் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’. இந்த படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ராம், ஜானு கேரக்டர்களில் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று கூறுவதே பொருத்தம். இந்த படம் வெளியான பின்னர் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ராம், ஜானு என்று பெயர் வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும் இந்த படம் பலருடைய பள்ளிக்கால மலரும் நினைவுகளை தட்டி எழுப்பியதோடு, இந்த படத்தில் வரும் காட்சிபோல் பல முன்னாள் மாணவர்கள் மீண்டும் இணைந்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பயின்ற மாணவ, மாணவியர்கள் மீண்டும் சந்திக்க சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் அந்த காலகட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
தங்களது குடும்பத்துடன் சந்தித்து கொண்ட இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில் அனைவரும் தங்களது பழைய நினைவுகளை ஆனந்தக்கண்ணீருடன் பரிமாறி கொண்டனர். ’96’ படம் பார்த்ததால்தான் தங்களுக்கு இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஐடியா வந்ததாக இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஒருவர் தெரிவித்தார்.