ஹோமாகமை பிட்டிபன பிரதேசத்தில் வீடொன்றில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, குழந்தையை உரப் பைக்குள் போட்டு வீட்டின் கதவுக்கு அருகில் வைத்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
30 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு ஏற்கனவே 5 வயதான மகன் இருப்பதாகவும் ஹோமாகமை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தனக்கு இரத்த போக்கு அதிகரித்துள்ளதாக கூறி, இன்று இந்த பெண் சிகிச்சை பெற்றுக்கொள்ள ஹோமாகமை வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் போது, பெண்ணின் வயிற்றில் இரண்டு நஞ்சுக்கொடிகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் பெண்ணிடம் நடத்திய விசாரணைகளில் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் வீட்டுக்கு சென்று நடத்திய தேடுதலில், கதவுக்கு அருகில் இருந்த உரப் பையில் இரண்டு குழந்தைகளில் சடலங்களை மீட்டுள்ளனர். இதன் பின்னர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண்ணுக்கு நேற்று இந்த இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தவறான தொடர்பு காரணமாக பெண் கருத்தரித்திருந்தாக விசாரணைளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து ஹோமாகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.