டெல்லியில் பெண் வைத்தியர் ஒருவர், சக வைத்தியர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல வைத்தியசாலையான ராம் மனோகர் லோகியா வைத்தியசாலையில், கதிரியக்கவியல் வைத்தியராக பணியாற்றிய பூனம் வோரா (வயது 52) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளியில் சென்றிருந்த வைத்தியர் பூனம் வோராவின் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, கதவு உட்பக்கமாக பூட்டியிருந்ததையடுத்து, போலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட வைத்தியரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
அத்தோடு, தற்கொலை செய்வதற்கு முன்னர், வைத்தியர் பூனம் வோரா எழுதிய கடிதத்தினையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், தன்னுடன் பணியாற்றிய 3 வைத்தியர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். குறித்த வைத்தியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும், வைத்தியரின் தொலைபேசியை கைப்பற்றிய பொலிஸார், அதிலுள்ள அழைப்புகள் மற்றும் தகவல்களைக்கொண்டும், கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.