இலங்கையின் அரசியல் உள்விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லையென சீனா குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஏனைய நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்ற சீன தூதுவர் Cheng-xueyuan அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
”இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிகவும் சிறந்த உறவு காணப்படுவது அனைவருக்கும் தெரியும். சீனா இலங்கையின் சிறந்த நண்பன். அத்தோடு, உண்மையான நண்பன்.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இன்றுடன் 62 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நாளில் இரு நாடுகளுக்கிடையிலான பிணைப்பு மேலும் வலுப்பெற வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக முடிந்தளவு உதவிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். தற்போதும் ஒரே பாதை ஒரே மண்டலம் திட்டத்தின் கீழ் நாம் சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இரண்டு தரப்பிற்கும் நன்மையளிக்கும் வகையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அத்தோடு, கண்டி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். விரைவில் சிறந்த தீர்மானமொன்று எட்டப்படுமென நம்புகின்றோம்.
அதேபோன்று, அரசியல் சர்ச்சைகளின்போது அரசியல் கட்சிகளும் மக்களும் சிறந்த தீர்மானங்களை எடுப்பார்கள் என நாம் நினைக்கின்றோம். இலங்கையின் அரசியல் ரீதியான உள்ளக விடயங்களில் சீனா தலையிடாது. அதேபோன்று ஏனைய நாடுகளும் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
ஆகவே எதிர்காலத்தில் மக்கள் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். எந்தவொரு நாடும் தமது தலையெழுத்தை தாமே தீர்மானித்துக்கொள்கின்றன. ஆகவே அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மற்றும் நாட்டு மக்கள் சரியான மற்றும் சிறந்த தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.