10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கிய கட்சி, அரச அதிகாரத்தை வகிக்கும்போது 60 ஆயிரம் பேர்வரை வேலையற்ற பட்டதாரிகள் இருப்பது பேரழிவு என்று தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்வியைப் பெற்று புத்திஜீவிகள் என உறுதிப்படுத்திக்கொண்டு வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு வேலையற்றிருப்பவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்திருப்பது கவலைக்குரியது.
இவ்வாறுவேலையற்றிருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 57 ஆயிரத்துக்கும் அதிகமாகும். ஆண்டுதோறும் வேலையற்ற பட்டதாரிகளின் வீதம் அதிகரித்துச் செல்வது அரசின் இயலாமையைக் காட்டுகின்றது. 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கிய கட்சி, அரச அதிகாரத்தை வகிக்கும்போது 60 ஆயிரம் வரையிலான பட்டதாரிகள் தொழிலற்று இருப்பது பேரழிவு.
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக தெரிவித்து, சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க கடந்த வருடம் நடவடிக்கை எடுத்தபோதும் அவர்களில் 5 ஆயிரத்து நூறுபேருக்கே தொழில் வழங்கப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. பலருக்கு அநீதி இழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே 2012ஆம் ஆண்டில் 48 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள எமது அரசு பின்பற்றிய முறைமையை முன்மாதிரியாகக்கொண்டு பட்டதாரிகளை வகைப்படுத்தாமல் வேலையற்ற அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பொருத்தமான தொழிலை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் – என்றார்.