இலங்கையில் நீர்வெறுப்பு நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதத்திலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தால் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வரும் நீர்வெறுப்பு நோயினை(விசர்நாய்க்கடி) தடை செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை மீளவும் சுகாதார அமைச்சிற்கு உள்ளீர்ப்பதற்காக சுகாதார அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கடந்த 65 வருடங்களாக சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு தோல்வியடைந்திருந்தது.
இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் துறைசார் நிபுணர்களைக் கொண்டு இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் திட்டம் வழங்கப்பட்டது.
குறுகிய காலப்பகுதியில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கான கருத்தடை சிகிச்சைகளும், 2600 க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த வருடத்தில் விசர் நாய்க் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சரவை பத்திரத்தால் விசர் நாய்க்கடி நோய் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் விரைவில் மீளப் பெறப்படாத பட்சத்தில், மிகவும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்“ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.