கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி சந்தோஷமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. கணவனும்- மனைவியும் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் அந்த சண்டையை அர்த்தத்தோடு போட்டால் அதுவும் சந்தோஷம் தரத்தான் செய்யும். அப்படி சந்தோஷத்திற்காக சண்டைபோடுவது எப்படி என்று பார்ப்போமா!
சண்டைபோடும்போது இருவருமே உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது. உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் நியாயமான முறையில் அந்த சண்டை நடக்கும். அப்போது வார்த்தைகள் தடித்துப்போகாமல் தரமானதாக இருக்கும். தரமான வார்த்தை களால் சண்டைபோடும்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு இருக்கும் கோபதாபங்கள் எல்லாம் வார்த்தைகளில் வெளியேறி, மனம் இலகுவாகிவிடும். அது பின்பு இருவரும் அதிக மகிழ்ச்சியோடு கூடிக்களிக்கும் சூழலை உருவாக்கும்.
ஆனால் உண்மையில் 95 சதவீத தம்பதிகளுக்கு சரியான முறையில் சண்டைபோடத் தெரிவதில்லை. சண்டை என்றாலே தன்னிலை மறந்து கண்டபடி வார்த்தைகளை பிரயோகித்துவிடுகிறார்கள். அது ஆபத்தான, அபத்தமான சண்டையாகி உறவுகளை பாதிக்கும் நிலைக்குசென்றுவிடும்.
சண்டை நமக்கு புதிதில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பத்தில் யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்குப் பிடிக்காத யாரேனும் நம்மை ஏதாவது சொன்னால் உடனே கொந்தளித்து, அவரைப் பழிக்குப்பழி பேசித் தீர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். அப்படியொரு நேரம் வரும்போது கண்டபடி பேசி, பழியைத் தீர்த்துவிடுவோம். இந்த வழியை சிறுவயதில் இருந்தே கடைப்பிடித்து பழக்கப்பட்டுவிட்ட நம்மில் பலர் திருமணத்திற்கு பிறகும் அதே வழிமுறையைத்தான் தொடர்கிறோம். சிலர் தொடர்ந்து சண்டையிட்டு, கோபத்திற்கே அடிமையாகிவிடுகிறார்கள். குடிக்கு அடிமையானவர்கள் சிறிதளவாவது குடித்தால்தான் மன அமைதி அடைவார்கள். அதுபோல் சண்டைக்கு அடிமையானவர்கள் தினமும் யாரிடமாவது, சிறிது நேரமாவது சண்டையிட்டால்தான் மன அமைதிபெறுவார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு அமைதியாக இருப்பதுதான் நல்லது.
கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?
* சண்டையின்போது உணர்ச்சிவசப்படாதீர்கள். நிதானமாக நீங்கள் சொல்ல நினைக்கிற விஷயங்களை துணையை குற்றம்சாட்டாமல் சொல்லுங்கள்.
* சண்டையின் அனைத்து அம்சங்களுக்கும் துணைதான் காரணம் என்று முடிவுசெய்துவிட்டு கோபங்களை கொட்டவேண்டாம். அப்படி யாராவது ஒருவரை முடிவுசெய்துவிட்டு சண்டைபோட்டால், அந்த சண்டை மேலும் சிக்கலாக்கிவிடும். எப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்துவிடவேண்டாம்.
* சண்டை தொடங்கும்போது அந்த சூழலை கருத்தில்கொள்ளுங்கள். நிதானமில்லாமல் உணர்ச்சிவசப் பட்டுவிடுவோம் என்று நினைத்தால், அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள். உங்கள் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடங்கும்வரை காத்திருங்கள். அமைதியான பிறகு பிரச்சினையைப் பற்றி பேசுங்கள். ஆனால், தம்பதியர் பலருக்கும் பிரச்சினையை ஆறப்போட மனதே வராது. உடனுக்குடன் உண்டு இல்லை என ஒரு கை பார்த்தால் தான் அடுத்த வேலையே ஓடும். இதனால் உங்கள் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன், வாக்குவாதத்தில் உங்கள் உறவுகளும் நடத்தையும் கூட கொச்சைப்படுத்திப் பேசப்படலாம். இதுதான் சண்டையின் மிக மோசமான கட்டமாகும்.
* எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது என்ற மன நிலையில் இருந்து மாறுங்கள். அது உங்களை மட்டுமல்ல, உங்கள் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும்.
* பிரச்சினை அதிகரித்து விவாகரத்து செய்துகொண்டவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியை வாக்குவாதம் செய்தே கழித்திருப்பார்கள். சாதாரண விஷயத்தைக்கூட பூதாகரமாக்கி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியபடியே வாழ்ந்திருப்பார்கள். விவாகரத்து ஆன பின்பும் ஒருவரை ஒருவர் விமர் சித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
* சண்டை ஆரம்பித்ததும் பதிலுக்கு பதில் என்ற மனோ பாவத்தில் இருக்கவேண்டாம். அந்த மனோபாவத்தில் இருந்தால் வார்த்தைப்போர் வெடித்து தீர்க்க முடியாத நெருக்கடியில் கொண்டுபோய்விட்டுவிடும்.
* சண்டையை மனைவி ஆரம்பித்தால், அவரது மனோநிலையில் இருந்து அதை பாருங்கள். அவர் தரப்பு நியாயம், கோபம் என எல்லாவற்றையும் அவரது இடத்தில் இருந்து யோசித்தால், சண்டைக்கான பின்னணி புரியும். சண்டை உடனே நின்று சமாதானமாகிவிடவும் வாய்ப்பு உண்டு.
* நல்ல சண்டை என்பது எப்போதாவது தான் நடக்கும். அது உறவுகளைக் கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ செய்யாது. அது பிரச்சினைகளை தீர்க்கப்பயன்படும்.
* நல்ல சண்டையில் பக்குவம் இருக்கும். அதில் உங்கள் உணர்வுகளை முன்னிறுத்திப் பேசுவீர்கள். அதுவே மோசமான சண்டை என்றால், ‘நடந்த எல்லாவற்றுக்கும் நீதானே காரணம். உன்னால்தான் எனக்கு இத்தனை பிரச்சினை…நீ மோசம்…உன் போக்கே சரியில்லை’ என துணையின் மீது குற்றங்களை அடுக்குவீர்கள். அது பிரச்சினையை கூடுதலாக்கிவிடும்.
* நல்ல சண்டையில் நிம்மதி கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயம் இருக்கும். மோசமான சண்டை அழுகை, கத்துதல், வீட்டைவிட்டு வெளியேறுதல்.. போன்று மோசமான சூழலை உருவாக்கும்.
* கணவன்- மனைவி இருவரும் முடிந்த அளவுக்கு சண்டைகளில் இருந்து விலகி இருக்கப்பாருங்கள். அடிக்கடி எந்த விஷயங்களுக்குச் சண்டைகள் வருகின்றன என யோசியுங்கள். கோபமில்லாமல் அவைகளை பற்றி பேசி திருத்தப்பாருங்கள். சண்டை போட்டாலும், அதை மறந்துவிட்டு சமாதானம் பேச முன்வாருங்கள். அன்பை போட்டிப்போட்டு வழங்க, அதிலும் சண்டையிட்டால் அதுதான் நல்ல சண்டை.