தேசிய பாதுகாப்பு குறித்து என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமாக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், பல்வேறு அமைப்புகளை காப்பாற்றி உள்ளது.
மேலும், பல்வேறு அமைப்புகளில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள்.
இந்தியாவில் அனைத்து மதங்களும் மொழிகளும் மதிக்கப்பட வேண்டும். பிற மதங்களை சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தியாவை பிரித்துப் பார்க்கிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? அவருக்கு பயம் ஏற்பட்டது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.
தேசத்தை விட நாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது. இன்னும் 3 மாதங்களில் நாடே உயர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். லோக்சபா தேர்தலை பார்த்து பிரதமருக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. மோடி என்கிற இமேஜ் முடிவுக்கு வந்து விட்டது என தெரிவித்துள்ளார்.