மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன், ராமசாமி முன்னிலையில் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை அனுப்பியது.
இந்நிலையில் குறித்த ஆணையத்தின் அழைப்பாணையை நிராகரித்த அப்பல்லோ நிர்வாகம், மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் எனவும், உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இதேவேளை குறித்த மனுவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அப்பலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.