தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழியினையே பின்பற்றுவதாக முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்தகாலத் தவறுகளை எண்ணி எதிர்காலத்தினை வீணடிப்பதற்கு நான் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட விடயம் சர்சையை ஏற்படுத்தியமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் முக்கியனமானதாகும். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது.
எதிர்காலத்தினைக் குறித்து சிந்தித்து முன்னேற முனைபவனுக்கு கடந்த காலம் சாதாரணமான கடந்த காலமாகவே இருக்கும். கடந்த காலத்துத் தவறுகளால் நிகழ்காலத்தைப் பாதிக்க விட்டோமானால் எதிர்காலம் பாதிப்படையும்.
அந்தவகையில், தவறுகளே செய்யாதவர்கள் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினர் என நான் கூறவில்லை.
அவ்வாறான தவறிழைத்தவர்கள் எனத் தெரிந்திருந்தும் அவர்களை மன்னித்துக் கூட்டமைப்பில் அவர்களையும் இணைத்துக் கொண்ட தம்பி பிரபாகரனின் முன்மாதிரியை முன்வைத்தே நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
அத்துடன் தமிழர்களின் எதிர்காலம் கடந்த காலச் செயற்பாடுகளால் மாசுபடக் கூடாது என்பதால் நான் அங்கு சென்றேன்.
இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பினர் முன்னர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களோ அவர்கள் குறிப்பிடும் மற்றவர்களின் குற்றங்களோ என்னுடைய முன்னோக்கிய அரசியல் பயணத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே எனது நிலையான கருத்தாகும்” என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.