ஒரு மாதத்தின் முன்னர் ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு இந்தியாவிலிருந்து புறப்பட்ட தேவமாதா 2 படகில் பயணிக்கும், ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்த அச்சங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாத படகுப்பணயத்தின் பின்னர், பெப்ரவரி 6ம் திகதி ரீயூனியன் தீவுகளிற்கு அருகில் அடையாளம் காணப்பட்ட இவர்களின் படகு, தற்போது எங்கிருக்கிறதென துல்லியமாக தெரியவில்லை.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்ட படகு, இரண்டில் ஒரு நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு தென்படுகிறது. எனினும், தமது நாட்டு கரையை படகு அடைய முன்னரே வழிமறிக்கும் முயற்சியில் இரண்டு நாட்டு கடற்படையும் ஈடுபட்டுள்ளன.
மீன்பிடி படகொன்று சுமார் 100 வரையான அகதிகளை ஏற்றிக் கொண்டு, கடந்த ஜனவரி 12ம் திகதி கொச்சியிலிருந்து புறப்பட்டிருந்தது. அந்த படகில் பயணித்தவர்கள் ஈழுத்தமிழர்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது. கொச்சிக்கு அண்மையிலுள்ள முன்னம்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் புறப்பட்டு, தேவமாதா என்ற மீன்பிடி படகில் அவர்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
நியூசிலாந்துதை நோக்கியே அவர்கள் செல்வதாக கருதப்படுகிறது.
அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து உடைகள், நீண்ட பயணத்திற்கு தேவையான உலருணவுகளை பொலிசார் மீட்டனர். விசாரணைகளையடுத்து, பயண ஏற்பாட்டை செய்த மூவர் கைதாகியுள்ளனர்.
இந்தியாவில் வசித்த இரண்டாம் தலைமுறை ஈழத்தமிழர்களே இந்த ஆபத்தான படகுப்பயணத்தை மேற்கொள்வது தெரிய வந்துள்ளது. 1970களில் இந்தியாவிற்கு வந்து, டெல்லியின் மடங்கிர் பகுதியில் குடியேறியவர்களின் இரண்டாம் தலைமுறையினரே இந்த ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்வது தெரிய வந்துள்ளது. ஒவ்வொருவரும் இந்திய மதிப்பில் 1.5 இலட்சம் ரூபா பயணத்திற்காக செலுத்தியுள்ளனர்.
ஈழத்தமிழரான சிறிகாந்தன் என்பரே இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக, இந்திய காவல்துறை அறிவித்துள்ளது.
பெப்ரவரி 6ம் திகதி ரீயூனியன் தீவுகளிற்கு அருகில் 72 அகதிகளுடன் இந்த படகு அடையாளம் காணப்பட்டது. படகை அடையாளம் கண்ட அவுஸ்திரேலிய கடற்படையினர் நியூசிலாந்தையும் எச்சரித்திருந்தனர்.
கடல்வழியாக நாட்டுக்குள் வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, இரண்டு நாடுகளும் தமது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ளன. அவுஸ்திரேலியாவிற்குள் கடல்வழியாக நுழையவர்கள் நவ்று தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நியூசிலாந்திற்குள் நுழைபவர்கள் ஆறு மாதம் தடுத்து வைக்கப்படுவார்கள். அதை நீடிப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும்.
இதேவேளை, தமிழகத்தின் 107 அகதி முகாம்களில் இருந்தும் யாரும் காணாமல் போயிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.