ஜனநாயகம், சட்ட ஒழுக்கம் குறித்து பேசும் ஜனாதிபதியே அரசியல் அமைப்பினை மீறிய வகையில் ஜனநாயக விரோத ஆட்சியை கொண்டு நடத்திச் செல்கிறார் என குற்றஞ்சாட்டிய மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் அமைப்பினை மீறி பாராளுமன்றத்தை கலைத்தபோதே அவருக்கு எதிரான குற்றப்பிரேரணை கொண்டுவந்து அவரை பதவி நீக்கியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,பிரதான இரண்டு கட்சிகளும் இந்த நாட்டினை நாசமாக்கி இலங்கையின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளனர். தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்ததன் நோக்கத்தினை பிரதான இரண்டு தலைவர்களும் கைவிட்டு தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே செயற்பட்டு வருகின்றனர்.
எனவே அரசியல் குழப்பங்களை சரிசெய்ய வேண்டுமென்றால் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்துவதே தீர்வாக அமையும் என்றார்.