யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.
யாழ்.மேல் நீதிமன்றில் உத்தியோகஸ்தர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று பெண் உத்தியோகஸ்தர்களை மூன்று நாட்களாக அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த 30ஆம் திகதி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பின்னர் கடந்த 08ஆம் திகதி அதே பத்திரிகையில் , யாழ்.மேல் நீதிமன்ற செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த செய்தி தொடர்பில் தாம் ஆராய்ந்த போது அச்செய்தியில் குறிப்பிட்டவாறு எந்த விதமான நிகழ்வுகளும் இடம்பெறவில்லை, அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அடிப்படையற்றது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் முன் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மேல் நீதிமன்றில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய இடங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், அந்நிலையில் குறித்த பத்திரிகையில் ” தாம் அந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்த போது அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை” என செய்தி வெளியிட்டு உள்ளனர்.
அந்த செய்தி நடந்த சம்பவத்தை முற்று முழுதாக மூடி மறைக்கும் நடவடிக்கை எனவும் , பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் எந்த விதமான கருத்துக்களையும் கேட்கவில்லை எனவும், அதனால் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு இந்த செய்தி பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.