பூமியில் பூச்சி இனம் மிக வேகமாக அழிந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன வகைகள் இறப்பதைக் காட்டிலும், எட்டு மடங்கு அதிகமாகப் பூச்சிகள் அழிந்து வருவதாகவும், இதே வேகத்தில் அழிந்து கொண்டிருந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் பூச்சி என்கிற இனமே பூமியில் இருக்காது என்று எச்சரித்துள்ளனர்.
மொத்தப் பூச்சிகள் தொகையில், ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் மடிந்து வருவதாக சிட்னிப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பூச்சிகள் அழிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றம், வாழ்விடம் பறிபோவது, புதிய நோய்களும் பூச்சிகள் அழிவுக்குக் காரணமாக அடுக்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை 53 சதவீதமும், தேனீக்களின் எண்ணிக்கை 46 சதவீதமும் குறைந்துள்ளது.
தட்டான்பூச்சி என்று கிராமத்தில் அழைக்கப்படும் பூச்சியினம், நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்குப் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு 1000 கொசு முட்டைகளை உண்ணும் திறன் படைத்தவை. நகரமயமாக்கலும், மாசுபடிந்த காற்றும் அவற்றை நகரத்திலிருந்து மட்டுமல்ல, கிராமத்திலிருந்தும் ஓட வைத்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தப் பூச்சியினம் மட்டும் 68 சதவிகிதத்துக்குக் குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். டைனோசர் அழிந்து போனதுக்குப் பிறகு, நடைபெறும் மிகப்பெரிய இன அழிப்பாக பூச்சிகளின் அழிவு பார்க்கப்படுகிறது.