பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
எனினும் சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான், சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கொக்குவில் பகுதியில் வசித்துவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை விவாகரத்து பெற்ற நிலையில், சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தாயாருக்கும் வேறு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்திய போதிலும், தாயார் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவரது தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்தோடு குறித்த சந்தேகநபரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதன்போது, சந்தேகநபர் தாயாரின் அனுமதியுடனேயே குறித்த சிறுமியை 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார் என்ற சந்தேகநபரின் சட்டத்தரணியால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை ஆராய்ந்த பொலிஸார், அதற்கமைய சிறுமியின் தாயாரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.