அவுஸ்திரேலிய அரசினால் அண்மையில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
நவுறு மற்றும் மனுஸ் தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றின் அனுமதி கிடைத்துள்ள பின்னணியில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு மருத்துவர்களின் பரிந்துரை அல்லது மருத்துவ குழுவின் பரிந்துரை அல்லது அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் அகதிகள் மற்றும் புகலிடம்கோருவோரை மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்ற ரீதியில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடல்கடந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் போலி மருத்துவ காரணங்களைக்காட்டி அவுஸ்திரேலியாவுக்குள் வர முற்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் எல்லைப் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீள ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் படகுப்பயணம் மேற்கொண்டு வரக்கூடியவர்கள் மற்றும் நவுறு, மனுஸிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்படுபவர்களின் இடைத்தங்கல் முகாமாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
எனினும், விசேட மருத்துவ தேவைக்குட்பட்டவர்களை தங்கவைப்பதற்குரிய வசதிகள் தமது சிறிய மருத்துவமனையில் இல்லை என கிறிஸ்மஸ் தீவின் உள்ளூர் கவுன்ஸில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.