திருவனந்தபுரத்தில் ஓடும் ரெயிலில் மாணவியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தில்ஷாத். இவர் தனது துறை ரீதியிலான பணி காரணமாக கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார்.
அவர் சென்ற அதே பெட்டியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவரும் பயணம் செய்தார். மாணவியிடம் போலீஸ்காரர் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டு வந்தார். அந்த மாணவியும் போலீஸ்காரருடன் பேசிக் கொண்டு பயணம் செய்தார்.
அந்த ரெயில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது அந்த பெட்டியில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் இறங்கி விட்டனர். இதை பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவியிடம் போலீஸ்காரர் தில்ஷாத் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை கற்பழிக்கவும் முயன்றார். இதனால் அந்த மாணவி அவரை எதிர்த்து போராடினார்.
மேலும் தனது செல்போனிலும் அவரை புகைப்படம் எடுத்தார். அதற்குள் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனே அந்த போலீஸ்காரர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பிச் சென்று விட்டார். பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நடந்த கொடுமை பற்றி ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
செல்போனில் படம் எடுத்த தகவலையும் அவர்களிடம் தெரிவித்தார். அந்த புகைப்படம் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி போலீஸ்காரர் தில்ஷாத்தை கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் அருகே படிஞானத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 41). மத போதகரான இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமிகளை பள்ளிக்கூடத்தில் சென்று விடுவது வழக்கம்.
சமூக சேவை போல அவர் இதை செய்து வந்ததால் அவரது ஆட்டோவில் பல பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இந்தநிலையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு சிறுமி படித்த பள்ளிக்கூடத்துக்கு சைல்டு லைன் ஊழியர்கள் சென்று மாணவிகளிடம் பாலியல் கொடுமை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது 5 பள்ளி சிறுமிகள் மதபோதகர் மனோஜால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர்.