இலங்கையிலிருந்து புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குகொண்டு வரப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்திருந்தது.
எனினும், தற்போது மீண்டும் அது தலைதூக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படியே, கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து இன்று இலங்கைக்கு மீண்டும் கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு குடிபெயர்வதற்குத் தயாராக இருந்த 22 பேரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர்கள் இருவரும் திஸ்ஸமகாராம பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.