சட்டவிரோதமாக மணல் எடுத்துச் சென்ற லொறி ஒன்றை பொலிசார் நிறுத்துமாறு பணித்தபோது அதனை மீறிச் சென்ற லொறிமீது துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டு லொறியை மடக்கிபிடித்ததுடன் சாரதியை கைது செய்துள்ள சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வாழச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு சம்பவதினமான நேற்று இரவு 07 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்தமுனை பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தபோது சட்டவிரோதமாக லொறி ஒன்றில் மணல் எடுத்துச் சென்ற போது அதனை நிறுத்துமாறு பணித்தனர்.
அதனை மீறி சாரதி லொறியை செலுத்திச் சென்றபோது லொறியின் டயர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து லொறியை மடக்கி பிடித்து சாரதியை கைது செய்தனர்.
குறித்த லொறி மட்டக்களப்பு நகர் பகுதியைச் சோர்ந்தது எனவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு எதிராக பிரதேச மக்கள் நேற்று முன்தினம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.