ரொறன்ரோவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு நீதிமன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு யூன் மாதம் 3ஆம் திகதி, ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள கனடியன் ரயர் நிறுவனத்தில் வைத்து அதன் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றமை, அதன்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியினை வைத்திருந்தமை, அதற்கு முந்தைய ஆண்டில் பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக சிரியாவுக்கு செல்வதற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள், 34 வயதான ரிஹாப் தும்கோஷ் என்ற பெண் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான விசாரணைகளை அடுத்து நேற்று (வியாழக்கிழமை) தீர்ப்பினை வாசித்த நீதிபதி, இவரது இந்த நடவடிக்கைகளில் அவருக்கு உள்ள மனநலக் கோளாறும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும், அவ்வாறு மனநலப் பாதிப்பு இல்லாத ஒருவருக்கு இவ்வாறான குற்றச்செயல்களுக்கு வழங்கப்படும் தண்டனையுடன் ஒப்பிடுகையில், இவருக்கு மிக மிக குறைவான தண்டனையே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே அவர் சிறையில் இருந்த காலத்தினையும் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதால், அவர் இன்னமும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.