ஹெய்டியில் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில் கனேடியர்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெய்டி ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி ஹெய்டியின் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறை போராட்டம் காரணமாக சுமார் 100இற்கும் அதிகமான கனேடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் பத்து பேர் கொண்ட கனேடிய மருத்துவக்குழுவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெய்டி மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இவர்கள் கடந்த ஜனவரி மாத இறுதியில் அங்கு சென்றுள்ளனர். 14 நாட்கள் அங்கு தங்கியிருந்து மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்குடன் குறித்த மருத்துவ குழு அங்கு பயணித்திருந்தது.
ஆனால், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அவர்களுக்கு அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முழு நாடும் முடங்கிப் போய் கிடப்பதாக ஒட்டாவாவை சேர்ந்த மருத்துவர் எமிலியோ பஸைல் தெரிவித்துள்ளார்.