சுகாதாரச் சீர்கேடு காரணமாக யாழ்ப்பாண நகரில் இரு உணவகங்கள் மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பகுதியினரால் மூடப்பட்டன.
சுகாதாரத்துக்கு ஒவ்வாத நிலையில் உணவுப் பொருள்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் 7 வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். நேற்று முன்தினம் அவை விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
உணவுப் பொதியில் மட்டத்தேள் இருந்தது உட்பட 7 குற்றச்சாட்டுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உணவக நடத்துநருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை மூடுமாறும் உத்தரவிடப்பட்டது.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனை சிற்றுண்டி நிலையத்துக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்களுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நடத்துநர் குற்றத்தை ஏற்க மறுத்த போதிலும் சிற்றுண்டி நிலையத்தை மறு அறிவித்தல் வரை மூடுமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள உணவகத்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டபோது உரிமையாளர் சுற்றவாளி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணைக்காக மறு திகதியிடப்பட்டது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள கருவாட்டுக் கடைகளில் சுகாதாரத்துக்குக் கேடான முறையில் காட்போட் பெட்டிகளில் மூடாமல் திறந்த நிலையில் வீதியோரம் கருவாடுகளைக் காட்சிப்படுத்திய நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட 105 கிலோ நெத்தலிக் கருவாடு நீதிமன்றப் பணிப்பின் பிரகாரம் அழிக்கப்பட்டது.