பெண்களுக்கான பிரச்சனைகளில் மாதவிடாய் காலமும் ஒன்று. இதனால் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பல.
அதிகமான இரத்தப்போக்கு, உடல் வலி , மன உளைச்சல் போன்றவைகளால் அதிகம் பாதிக்கப்படுவர்.
ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு முன் அல்லது 8 நாட்களுக்கு பின் வரும் மாதவிடாய் பிரச்சனைகளை சுமந்து வருகிறது என்பதே அர்த்தம்.
இதற்கான காரணங்களை அறியும் போது உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உணவிற்கும் மாதவிலக்கிற்கும் என்ன பெரிய சம்மந்தம் இருக்க முடியும் என்று தோன்றுகிறதா?
அப்படி என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களின் செயலாற்றலால் ஏற்படுவதாகும். ஈஸ்ட்ரோஜென் புரோஜெஸ்டொரோன் போன்ற ஹார்மோன்கள் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எடை அதிகரிப்பு அல்லது குறைப்பு இரண்டுமே உடலில் ஏற்படும் மாற்றத்தின் விளைவுகளாகும் . இந்த திடீர் எடை குறைப்பு அல்லது எடை அதிகரிப்பு இரத்தத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவை சமனற்ற நிலையில் வைத்து மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்ற நிலையில் மாற்றுகிறது.
மாதவிடாய் காலத்தை எளிமையான முறையில் கடக்க சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சுழற்சியை சீராக்க
வைட்டமின் மற்றும் மினரல்கள் உடலுக்கு மிகவும் அவசியம் . ஊட்டச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவது மிகவும் நல்லது.
பயறு வகைகள், ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் மாதவிடாய் காலத்தில் மது அருந்தாமல் இருப்பது நல்லது. ஆல்கஹாலின் தன்மை கல்லீரலில் வளர்சிதை மாற்றத்தில் சேதத்தை விளைவித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கொழுப்பு சத்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஆகவே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும் கடல் உணவுர்கள், நட்ஸ் போன்றவற்றை உண்ணுவது நலம்.
வலிகளை குறைக்க
வாழைப்பழம் மாதவிடாய் காலத்திற்கு ஏற்ற உணவாகும். இதில் உள்ள மக்னீசியம், செரோடோனின் அளவை அதிகரிக்கும். இதனால், தசை வலி மற்றும் மன உளைச்சல் குறையும். லவங்க பட்டை கொண்டு தயாரித்த டீயை தேனுடன் சேர்த்து பருகுவதால் உடலுக்கு உள்ளெ சூடு பரவும். நரம்புகள் அமைதியாகும்.
மாதவிலக்கு முன் அறிகுறிகள்
மாதவிலக்கு முன் அறிகுறிகள் பொதுவாக எடையில் மாறுபாடு, குமட்டல், தலைவலி , மன நிலை மாற்றம் போன்றவையாகும். இந்த நிலையில் இருந்து மீள கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை மற்றும் காஃபின் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மெனோபாஸ் காலகட்டம்
ஹாட்பிளாஷ் என்பது மெனோபாஸ் காலத்தில் அல்லது அதற்கு முன்னர் தோன்றும் அறிகுறியாகும். கழுத்து மற்றும் முதுகு பகுதியில் அதிகமான சூடு பரவி வியர்வை அதிகரிக்கும்.
இதய துடிப்பு அதிகமாகும். உடலில் ஈஸ்ட்ரோஜெனின் அளவு சீரற்ற நிலையில் இருக்கும்போது இவை தோன்றும். இந்த சமயத்தில் உடல் வெப்ப நிலையை சீராக வைத்து கொள்வது அவசியமாகும். ஆளி விதைகள் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும். இதில் இருக்கும் பைத்தோ ஈஸ்ட்ரோஜென் இயற்கையான முறையில் ஹார்மோன் அளவை சீராக்குகிறது. வேக வைத்த புரத பொருட்களை எடுத்து கொள்வது சிறந்தது.
ஆரோக்கிய எடையை அதிகரிக்க
ஆரோக்கியமான எடை என்பது முழு தானியம், இயற்கை புரதம், இதயத்திற்கு ஏற்ற கொழுப்பு சத்து மற்றும் அதிக அளவு காய்கறிகள் ஆகியவை சேர்ந்ததாகும். ப்ரோக்கோலி குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க சிறந்ததாகும்.
ரத்த போக்கை கட்டுப்படுத்த
2 மாதங்கள் தொடர்ந்து அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டால் ப்ரோஜெஸ்ட்ரோன் அளவில் குறைபாடு உள்ளதென்று பொருள். இரத்தசோகை உள்ளவர்கள் இந்த நிலையில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
இழந்த இரத்தத்தை மீண்டும் பெற வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகளாகிய பாதாம், கீரை, சர்க்கரை வள்ளி கிழங்கு, அவகேடோ போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றும் ஒரு பெண்கள் நல மருத்துவரை கலந்து ஆலோசிப்பதும் நல்ல தீர்வை தரும். அதிகமான மற்றும் குறைவான உணவு பழக்கம் மாதவிடாய் காலத்தை இன்னும் கடினமாக்கும். ஆகவே ஊட்டச்சத்து மிகுந்த சரி விகித உணவு அட்டவணையை பின்பற்றுவது நல்ல பலனை தரும்.