மன்னார் பாரிய மனித புதை குழி குறித்த காபன் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னார் சதொச நிறுவன கட்டடத் தொகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மனித எச்சங்களின் சில மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாண ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த மனித எச்சங்கள் எந்த காலத்தில் புதைக்கப்பட்டவை என்பதனை கண்டறிந்து கொள்ளும் நோக்கில் காபன் ஆய்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புளோரிடா ஆய்வு கூட அறிக்கை நேற்றிரவு கிடைக்கப் பெற்றதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் மூலம் தமக்கு இந்த ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதன் பிரதியொன்று கூரியர் சேவையூடாக நீதிமன்றிற்கு கிடைக்கப் பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த காபன் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றிற்கு கிடைக்கப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.