மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 14 பேருக்கு, மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடியுமென, சட்டமா அதிபரால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனையை நடைமுறைபடுத்தக்கூடிய குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, ஜனாதிபதியால், நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தால், இது தொடர்பான தகவல்கள், அமைச்சிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
அந்தத் தகவல்கள், சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சட்ட மா அதிபரின் பரிந்துரைகளுடன், அமைச்சினால், கடந்த ஜனவரி மாதத்தில், ஜனாதிபதியிடம் அந்தப் பெயர்கள் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 48 பேர், சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 30 பேர், மேன்முறையீடுகளைச் செய்துள்ளனர்.
எஞ்சியுள்ள 18 பேரில் மூவருக்கு, எவ்விதப் பிரச்சினைகளுமின்றி மரண தண்டனையை விதிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 15 பேர் தொடர்பான விவரங்கள், சட்ட மா அதிபர் திணைக்களத்தால், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியால், கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டது.
இந்தப் 15 பேரில் 11 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்விதத் தடையும் இல்லையென, சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
இதன்படி, எவ்விதத் தடங்களுமின்றி மரண தண்டனை நிறைவேற்றக்கூடிய 14 பேரின் பெயர்ப் பட்டியல் தயாராகியுள்ளது. இவர்களில், பாகிஸ்தான் பிரஜைகள் நால்வரும் இலங்கைப் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.
இவர்கள் 14 பேரும், வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகள் என்றும் ஏனையவர்கள், போகம்பரை மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
18 பேரில் ஏனைய நால்வர் தொடர்பில், கோட்டை, நீர்கொழும்பு, நுகேகொடை நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, அவர்களின் பெயர்கள், மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளவர்களின் பட்டியலில் இணைக்க முடியாதுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களத்தால், ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மரண தண்டனையை நிறைவேற்றக்கூடிய 14 பேருக்கும், அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சட்ட மா அதிபருக்கோ அல்லது நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கோ, இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.