பால் மா நிறுவனங்களுக்கு தேவையான வகையில் நாட்டின் சுகாதார துறையை நடத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாம் பால் மா நிறுவனங்களுக்கு அடிமையாகியுள்ளோம், பால் மா நிறுவனங்களுக்கு தேவையான வகையில் நாட்டை வழிநடத்த முடியாது.
நாட்டின் சுகாதாரத்துறையை பால் மா நிறுவனங்கள் வழிநடத்த முடியாது. இது ஓர் பிழையான செயற்பாடாகும்.
பல்தேசிய நிறுவனங்களினால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
உலகில் பால் மா இறக்குமதி செய்யும் நாடுகள் 10 முதல் 15 வரையிலேயே காணப்படுகின்றன. அவ்வாறான நாடுகளின் வரிசையிலேயே நாம் இடம்பெற்றுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் எவ்வித தீங்கான பொருட்களும் கிடையாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் வேறு கொழுப்புக்களோ அல்லது எண்ணெய் வகைகளோ உள்ளடங்கவில்லை என சுகாதார அமைச்சின் உணவு ஆய்வகம் உறுதி செய்துள்ளது.
இறக்குமதி செய்பய்பட்ட பால் வகைகளில் வேறு மிருகங்களின் கொழுப்புக்களோ, எண்ணெய்களோ உள்ளடங்கவில்லை என இலங்கை தர நிர்ணயசபையும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.