ஹரிஸ்ணவியின் படுகொலை சம்பவமானது மக்கள் மனங்களிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து செல்கின்றது. இதற்கு நீதியை பெற்று தர ஊடகங்களாலே முடியுமென ஹரிஸ்ணவியின் தந்தை ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி 14 வயதில் வீட்டில் தனியாக இருந்தபோது ஈன இரக்கமற்ற பாவி ஒருவரால் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.
எனினும் இன்று வரையில் எனது மகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்கள் முன்வர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு ஊடகங்களின் உதவியுடன் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எனது மகளின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு இன்னும் தண்டனை பெற்றுக்கொடுப்படவில்லை, நீதியும் நிலைநாட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் எந்த தாய்க்கோ, தந்தைக்கோ எமது நாட்டில் ஏற்பட்டுவிட கூடாது. வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதின்றில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த வருடம் (26.11) வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதும் எந்தவித முன்னேற்றமுமின்றி அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் சித்திரை மாதம் 30ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.