நடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும். அதற்கான அறிவித்தல் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொழும்பு கெத்தாராம ஆர். பிரேமதாஸ கிரிக்கட் விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள நடைபாதை வியாபார நிறுவன உரிமையாளர்கள் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு உடனடியாக செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுதொடர்பாக உரிய வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்படுள்ளது. அதனால் அறிவித்தல் வழங்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அந்த இடங்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் அவை உடனடியாக அகற்றப்படும்.
அதேபோன்று ஏனைய இடங்களிலுள்ள சட்டவிரோத நடைபாதை வியாபார நிறுவனங்களுக்கும் விரைவில் அறிவித்தல் வழங்கப்பட இருக்கின்றோம். மேல்மாகாணத்தில் இருக்கும் அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையொன்று பிரதம செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.