யாழ் மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியபோது அங்கு உரையாற்றிய இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றி நீண்ட பட்டியலை முன்வைத்து உரையாற்றினார்.
அப்போது வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு முறையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதில்லை என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.
பல பாடசாலைகளில் போதிய கட்டட வசதிகள் இல்லை என்றும், அவ்வாறு கட்டடங்கள் இருக்கும் நிலையில் அதற்கேற்ப போதிய தளபாட வசதிகள் கிடையாது என்றும், முறையான மலசலகூட வசதிகளோ குடிநீர் வசதிகளோ பல பாடசாலைகளுக்கு இல்லை என்றும், கணினி வசதிகள், ஆசிரிய ஆளணியினர் போன்றனவும் பல பாடசாலைகளுக்கு போதிய அளவில் இல்லை என்றும் அங்கு அவர் தெரிவித்திருந்தார்.
யுத்த காலத்தில் கூட வடக்கு மாகாணம் கல்வி நிலையில் உயர்வாக இருந்ததென்று கூறிய அவர் தற்போது அந்த நிலை மாறிவிட்டதாகவும் கூட்டிக் காட்டினார். அங்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு பாடசாலைகளில் நிலவும் குறைகளை சீர் செய்வதற்காகவே விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.