ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே தன்னுடன் இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மகிந்த ராஜபக்ச, “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே திறந்து வைக்கின்றார்கள்.
இன்று மிகவும் மந்தகதியான முறையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்கம் செய்த எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் மக்களால் காண முடியாது.
தற்போதைய அரசாங்கத்தினால் வினைத்திறனான முறையில் செயற்பட முடியாது. இதனை அறிந்து கொண்டே ஜனாதிபதி என்னுடன் இணைந்து கொண்டார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழக்கப்பட வேண்டும் என கோரிய வடக்கு மாகாண அரசியல்வாதிகள், தற்போது மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு குரல் கொடுக்காதுள்ளனர்.
தற்போது வடக்கு மாகாண சபை உள்ளிட்ட பல மாகாணங்களின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும். தேர்தலை நடத்த கோராது, வடக்கு அரசியல்வாதிகள் மௌனம் காத்து வருகின்றன என்றார்.