தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24 ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது.
இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.
இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்த இவர், பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்தார்.
கால்பந்து ரசிகர் கூட்டமைப்பை நிறுவி தாய்லாந்து விளையாட்டு துறையிலும் புகழ்பெற்று விளங்கினார். பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரையும் பவுலின் என மாற்றிக்கொண்டார். இவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரின் ஆசை பலரால் வரவேற்கப்பட்டுள்ளது.
தான் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையிலாவது திருநங்கை ஒருவர் நாட்டின் தலைவராக வருவார் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராகவும், முதல் திருநங்கை வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கும் பவுலின் காம்ப்ரிங் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.