யாழ்ப்பாணத்தில் ஐ.நா அதிகாரி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, குறித்த அச்சுறுத்தல் சம்பவம் கடந்த ஆண்டு நொவம்பர் 27ஆம் நாள் இடம்பெற்றுள்ளது.
“தம்மை சிறிலங்கா இராணுவத்தினர் எனக் கூறிக் கொண்ட இரண்டு பேர், யாழ். மாவட்டத்தில் உள்ள ஐ.நா அதிகாரி ஒருவரின் வதிவிடத்துக்குள் நுழைந்தனர்.
ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்தார். குறித்த ஐ.நா அதிகாரி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்ததுடன், அந்த அதிகாரியை அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்” என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
எனினும், வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தமது படையினர் எவரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புபடவில்லை என்று கூறியுள்ளனர்.
காவல்துறை திணைக்களம் சிறிலங்கா அதிபரின் கட்டுப்பாட்டின் கீழை் கொண்டு வரப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சிறிலங்கா அதிபரிடம் முறையிடப்பட்டுள்ளது.