பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என வழியுறுத்தியும் கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளம் உயர்த்தப்படுவதாக கூறப்படுவது ஏமாற்று நடவடிக்கை என்றும் தெரிவித்து, ஆயிரம் ரூபாய் இயக்கம் அதனுடன் இணைத்துள்ள 30க்கு உட்பட்ட சிவில் அமைப்புகள் அட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (17) அட்டன் மல்லியப்பு சந்தியில் மக்கள் எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அட்டன் நகரின் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டோர் எதிர்ப்பு கோசங்கள் எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஆயிரம் ரூபாய் இயக்கத்தில் இணைந்து செயற்படும் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஆயிரம் ரூபாய் இயக்கத்தில் இணைந்துள்ள இடதுசாரி கட்சிகள், 30க்கு மேற்பட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிநிகள், சமய குருமார்கள், தன்னார்வலர்களான இளைஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் கோரிக்கையைமுன்வைத்து போராடிய போதும், வெறுமனே 20 ரூபாவை வழங்கி ஏமாற்றப்பட்டள்ளனர், தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஏமாற்றி வருகின்றனர், 750 ரூயாய்க்கு மேலாக 140 ரூபாயை பெற்றுதருவதாக கூறியவர்களும் ஏமாற்றிவிட்டனர் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.