காஷ்மீர் இராணுவ தாக்குதலில் பலியான வீரர்கள் என நினைத்து விடுதலைப்புலிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வொன்றினால் தமிழ்நாடு சிறிவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் விடுதலைப் புலிகளின் படத்தை ராணுவ வீரர்கள் என நினைத்து பதாதையில் அச்சிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இவர்கள் அஞ்சலி செலுத்துவது ராணுவ வீரர்கள் அல்ல, விடுதலைப் புலிகள் என்பதை கூட அறிந்திருக்கவில்லை என சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பலியான ராணுவ வீரர்கள் என்று தவறாக பரப்பப்படும் இந்த விடுதலைப்புலிகளின் படங்களை கடைக்காரர் தவறாக அச்சிட்டு கொடுத்து விட்டதாக அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற ஒரு நிகழ்வு தமிழ்நாடு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலும், சுமைதூக்கும் தொழிலாளர்கள் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக கூறி விடுதலைப் புலிகளின் படத்தை அச்சிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த பதாதைகளில் உள்ள படங்கள் அனைத்தும் சிறிய அளவில் இருந்ததால் பொதுமக்களால் கூட எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது.
இந்நிலையில் குறித்த பதாதை தொடர்பில் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டிய பின்னரே இந்தப் பதாதைகளை அகற்றப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை தகவல்களாக பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சில சமூக விரோதிகள் தான் இது போன்று விடுதலை புலிகளின் படத்தை ராணுவ வீரர்களின் படம் என்று பரப்பி வருவதாக காவல்துறையினர் விசனம் தெரிவித்துள்ளனர்.