துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,
“எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை பொது விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பிரேரணை முன்வைக்கவுள்ளளார்.
துரையப்பா விளையாட்டு அரங்கை உருவாக்கியது துரையப்பா, கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய இந்த விளையாட்டு அரங்கின் பெயர் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றுள்ளதுடன், துரையப்பா விளையாட்டு அரங்கு என்ற பெயரின் ஊடாகவே இந்தியா புனரமைப்புச் செய்து கொடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில், 3 தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை மாற்றுவது தற்போதைய சூழ்நிலையில் தேவையற்ற விடயம்.
துரையப்பா இறந்து 34 வருடங்களைக் கடந்த நிலையில், அதை கையில் எடுத்து தேசியம் பேசுவது தேவையற்ற விடயம். விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட துரையப்பா விளையாட்டு அரங்கு என்ற பெயர் கொண்டே இருந்த ஒரு அரங்கின் பெயரை மாற்றுவது என்ன ஒரு தேசியம்.
இன்றைய சூழ்நிலையில் இது ஒரு தேவையற்ற விடயமென்பதுடன் அர்த்தமற்றதென்றாகும்” என சீ.வி.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.